Friday, December 16, 2011

இறைவனுக்கு நன்றி கூறி காலைப்பொழுதை தொழுகையோடு துவக்குவோம்!




நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக மட்டுமில்லாமல், இறைவனும் அவனுடைய தூதரும் கற்றுத்தந்த வகையில் பயனுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். சூரியோதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய இரு நிலைகளின் மூலமாக இறைவன் தன்னுடைய அடியானுக்கு, அவனின்அருட்கொடைகளை ஞாபகப்படுத்துகிறான். அதிகமனோர் நன்றி செலுத்தாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறான்.

“நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை” (40:61)

ஆரோக்கியமான உடல்நிலயை தந்து, உடல் உறுப்புக்கள் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவுடன் இறைவனுக்கு நன்றி செலுத்தவில்லை எனில் நம்மைவிட நன்றிமறந்தவர்கள் யாராக இருக்க முடியும். இறைவனிடம் மிகப்பெரும் நன்றியுள்ள அடியாராகிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் “சிறிய மெளத்துக்குப்பிறகு மீண்டும் உயிர் கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்” என்று கூறி அன்றைய காலைப்பொழுதை இன்முகத்துடன் வரவேற்பவராக இருந்துள்ளார்கள் என்பதை ஹதீஸ்களில் காண்கிறோம்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும், மழைக்காலங்களிலும் போர்க்காலங்களிலும், பஜ்ருடைய முன் சுன்னத் 2 ரக் அத்தையும் பர்ளு தொழுகையையும் தொடர்ந்து தொழுது வந்ததையும் ஹதீஸ்களில் காண முடிகிறது. இங்கே நம்முடைய நிலையை சீர்தூக்கிப்பார்க்கும் நிலையில் உள்ளோம். இரவில் தாமதமாக உறங்கி, காலையில் தாமதமாக எழும்போது, அவசர கதியில் இறைவனை புகழ்வதும் இல்லை, தொழவேண்டும் என்ற சிந்தனையும் வருவதில்லை.

தொழுகையில் அதன் நேரத்தில் தொழவேண்டும் என்ற குர்ஆன் வசனம், தாமதமாக உறங்கி தாமதமாக எழுபவன் ஷைத்தான், தொழாதவனின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான், தொழாதவன் அன்றைய பொழுதை சோம்பலுடன் கழிக்கிறான் போன்ற ஹதீஸ்களை நன்கு அறிந்திருந்தும், தொழுகையில் பொடுபோக்காக இருப்பதை என்னவென்று சொல்வது. இறைவனிடத்திலே நன்றியுள்ள அடியானாக மாறுவதற்கு பதிலாக, இறைவனிடத்திலே சபதமிட்டு வந்த ஷைத்தான் வெற்றி அடைவதற்கு உதவி செய்வதுபோல் உள்ளது நமது செயல்பாடுகள்.
798. அனஸ்(ரலி) அறிவித்தார்.
மக்ரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் நபி(ஸல்) காலத்தில் இருந்தது.
Volume :1 Book :10
891. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் 'அலிஃப் லாம் மீம் ஸஜ்தா'வையும் 'ஹல்அதா அலல் இன்ஸான்' என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர்.
Volume :1 Book :11
3269. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், 'இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கிறது. எனவே, நீ தூங்கிக் கொண்டேயிரு' என்ற போதித்து (அவனை விழிக்க விடாமல் உறங்க வைத்து) விடுகிறான். அவர் (அவனுடைய போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் உளூச் செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகிறது. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்.
Volume :3 Book :59
4511. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
(ஆரம்பத்தில்) 'வெள்ளைக் கயிற்றைக் கறுப்புக் கயிற்றிலிருந்து பிரித்தறியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 02: 187வது வசனத்தின்) தொடர் 'விடியலின்' ('மினல் ஃபஜ்ர்') எனும் சொல் நீங்கலாக அருளப்பட்டது. அப்போது மக்கள் சிலர் தங்கள் இரண்டு கால்களிலும் (ஒன்றில்) வெள்ளைக் கயிற்றையும் (மற்றொன்றில்) கறுப்புக் கயிற்றையும் கட்டிக்கொண்டு இரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், 'மினல் ஃபஜ்ர்' (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போது அவர்கள், அதிகாலையையும் இரவையும் தான் இது குறிக்கிறது என்று அறிந்துகொண்டார்கள்.
Volume :5 Book :65
7486. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேர்கிறார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் வானத்திற்கு ஏறிச் செல்வார்கள். அங்கு அவர்களிடம் அல்லாஹ், 'என் அடியார்களை எந்த நிலையில்விட்டுவிட்டு வந்தீர்கள்,' என்று அவர்களைப் பற்றி அவன் நன்கறித்த நிலையிலேயே - கேட்பான். அதற்கு வானவர்கள், 'அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையில் அவர்களைவிட்டுவிட்டு வந்தோம். அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் சென்றோம்' என்று பதிலளிப்பார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 129
Volume :7 Book :97

இரவில் முந்நேரம் உறங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து, இறைவனைப்புகழ்ந்து, பஜ்ர் தொழுகையை நேமமாக தொழுது, இறைவனின் அருளைப்பெற்று, அன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையப்பெற்றவர்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.